
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கிய நிலையில் நிலங்களில் தேங்கியிருந்த மழையால் தண்ணீரால் ஏக்கருக்கு 50 மூட்டைகள் கிடைக்க வேண்டிய இடத்தில் வெறும் 15 மூட்டைகளே கிடைத்ததால் விவசாயிகள் வேதனை மற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரிக்கரை பகுதியில் இந்தாண்டு சுமார் 1100 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.
ஆவணி மாதம் நடவு செய்த நிலங்களில் கதிர் முற்றியதால், கடந்த இரண்டு நாள்களாக அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முன் கூட்டியே நெல் நடவு செய்யப்பட்ட நிலங்களில் பயிர்கள் நன்றாக விளைந்த நேரத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், நெற்கதிர்கள் கீழே சாய்ந்தன.
விவசாயிகள் நெற்கதிர்களை தூக்கி நிறுத்தி கயிறு மூலம் கட்டி ஓரளவுக்கு காப்பாற்றினர். இதையடுத்து,நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பாரூர் பகுதியில் சாகுபடி செய்த நிலங்களில் ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் கிடைக்க வேண்டிய இடத்தில், வெறும் 15 முதல் 20 மூட்டைகள் வரை மட்டுமே கிடைத்துள்ளது என்று பாரூர் விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேபோல, வாடமங்கலம் பகுதிகளில் பயிர் செய்தவர்களுக்கு ஏக்கருக்கு 10 மூட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
ஏக்கருக்கு ஐந்தாயிரம் வரை செலவு செய்து 10 மூட்டைகள் மட்டுமே நெல் கிடைத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர்.
நெல் 72 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
"மூட்டை ரூ.1,500-க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகள் நட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
நெற்கதிர்கள் நிலத்தில் தேங்கிய நீரில் சாய்ந்ததால் ஒரு ஏக்கர் அறுவடை செய்ய இரண்டரை மணி நேரமாகிறது. இதனால் கூலியாக இயந்திரத்துக்கு மட்டும் ரூ.7000 வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும், நெற்பயிர்கள் தண்ணீரில் தேங்கி நின்றதால், வைக்கோல்கள் சேதமடைந்துள்ளன. இதனால் வைக்கோல் வியாபாரிகள் யாரும் வைக்கோல் வாங்க முன்வரவில்லை" என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.