
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் இறங்கியது. இதனால், பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஓட்டுநருக்கு காலி அடிபட்டதால் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பொறையாறுக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்பேருந்தை தஞ்சை மாவட்டம், அத்திப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் த. காளிதாஸ் (43) ஓட்டிவந்தார். அந்தப் பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர்.
இந்தப் பேருந்து நேற்று அதிகாலை 3.40 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் சின்ன நாகங்குடி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துதது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் இறக்கினார் ஓட்டுநர். இதனால், பயணிகள் அலறினர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவலாளார்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, பயணிகள் அனைவரையும் மாற்று வாகனங்களில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் த. காளிதாசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், கிரேன் வரவழைக்கப்பட்டு, பேருந்தை மீட்கும் பணி காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை நடைபெற்றதால் மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.