பட்டம் பெற முடியாமல் தவித்த மாணவர்கள்.! 4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழாவிற்கு தேதி அறிவித்த ஆளுநர்

By Ajmal KhanFirst Published Jun 8, 2023, 12:24 PM IST
Highlights

பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் தேதி வழங்காத காரணத்தால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் வெளியானதையடுத்து 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த தேதியை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  

பட்டமளிப்பு விழா- மாணவர்கள் பாதிப்பு

கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவானது நடைபெறும். ஆனால் தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதாக தகவல் வெளியானது.இதன் காரணமாக பல லட்சம் மாணவர்கள் பட்டபடிப்பிற்கான சான்றிதழ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பல்கலைக்கழகங்களில் தகவல் கேட்ட போது ஆளுநர் தேதி கொடுக்காத காரணத்தால் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லையென தெரிவிக்கப்பட்டது.

 தமிழகத்தில் இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகி இருந்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் கிடைக்காமல்  2 லட்சம் மாணவர்கள் தவித்து வருவதாக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 6 மாதங்களே செல்லுபடியாகும் தற்காலிக சான்றிதழ் மட்டுமே பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. 

பட்டமளிப்பு விழா நடத்தாதது ஏன்.?

இதன் காரணமாக  9 மாவட்டங்களில் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை பட்டம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை வேந்தரை தேர்வு செய்ய தேர்வு குழு தமிழக அரசால் அமைக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பட்டமளிப்பு விழா நடத்துமாறு கல்லூரி நிர்வாகம் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஜூலைமாதம்  நடத்த தேதி அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் மாளிகைதெரிவித்திருந்தது. இந்தநிலையில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

4 பல்கலைக்கழங்களில் பட்டமளிப்பு விழா

அதன்படி,சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 16ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும், திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் வருகிற 19 ஆம் தேதியும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 28 ஆம் தேதியும்,  ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 7 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் கொடுத்தார்.!ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி திடீர் புகார்

click me!