
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை முறைப்படுத்த தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக 2 அரவாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஏராளமான விளை நிலங்கள் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எனவே இதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் கடந்த மார்ச் 28-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறுபத்திரப் பதிவு செய்யலாம் என ஏற்கெனவே எஸ்.கே.கவுல் விதித்த தடையை தளர்த்தி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் எந்த நோக்கத்துக்காக பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப் பட்டதோ, அந்த நோக்கத்தை இதுவரை தமிழக அரசு நிறை வேற்றவில்லை. எனவே புதிதாக வரைவு விதிகளையோ, கொள்கை முடிவையோ தமிழக அரசு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகளை இன்று தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை முறைப்படுத்த தமிழக அரசு புதிய விதிமுறைகளை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.மேலும் இது தொடர்பாக 2 அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன
இந்தபிதிய விதிமுறைகளின்படி பத்திரப் பதிவுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும என தெரிவிக்கப்பட்டுள்ளது.