"அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளவில்லை" - தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடிய "கியா" கார் நிறுவனம்

 
Published : May 05, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
"அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளவில்லை" - தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடிய "கியா" கார் நிறுவனம்

சுருக்கம்

kia motors escaped from tamilnadu

தமிழகத்தில் முதலீடு செய்ய கோடிக்கணக்கில் அ.தி.மு.க. அமைச்சர்கள் லஞ்சம் கேட்டதையடுத்து, தென் கொரியாவைச் சேர்ந்த “கியா” என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய மறுத்து வெளியேறியது.

ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் தனது கார் தொழிற்சாலையை கியா நிறுவனம் தொடங்க இருக்கிறது. கியா நிறுவனம் தொழில் தொடங்க கையகப்படுத்திய நிலத்தின் பாதி தொகையை லஞ்சமாக அதிமுகவினர் கேட்டதையடுத்து, அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கியா நிறுவனத்துக்கு சென்னையைச் சேர்ந்த “இன்பிராடெக் இன்பிராஸ்டிரெக்சர் சர்வீசஸ்” என்ற நிறுவனம் ஆலோசனை வழங்கி வந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் கண்ணண் ராமசாமி, கியா நிறுவனத்தின் முடிவைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கண்ணண் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில், கூறியதாவது-

தென் கொரியாவைச் சேர்ந்த கியா ஆட்டோமொபைல் நிறுவனம் கார் தொழிற்சாலை தொடங்க எங்களிடம் ஆலோசனை கேட்டது. இந்த கியா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். நாங்கள் விரிவாக ஆய்வு செய்து தமிழகம் முதலீடு செய்ய சிறந்தது, 2-வது குஜராத் மாநிலம், 3-வது ஆந்திரா மாநிலம் என அந்த நிறுவனத்துக்கு அறிக்கை அளித்தோம்.

இதையடுத்து, தமிழகத்தில் ஏறக்குறைய 110 கோடி டாலர் (ரூ.7 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய முடிவு செய்தது. மேலும், தமிழக அரசிடம் இருந்து, வரிச்சலுகைகள், மின்சார கட்டணத்தில் சலுகை, கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலைகள், கழிவுநீர் செல்லும் வசதி, குடிநீர், விரைவான ஒப்புதல்கள், நிலம் கையகப்படுத்த உதவுதல் உள்ளிட்ட உதவிகளை அந்த நிறுவனம் கோரியது.

ஆனால், தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகளிடம் இதுகுறித்துப் பேசினால், தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் தொகையில் பாதியை லஞ்சமாக கேட்டனர். இதனால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பணிகளை நிறுத்தியது. ஒருவேளை கியா நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து இருந்தால், 2019ம் ஆண்டு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 ஆயிரம் கார்கள் உற்பத்தி நடந்திருக்கும். அனைத்தும் கெட்டுவிட்டது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய முதலீட்டு இழப்பாகும்.

சிறீபெரும்புதூரில் உள்ள ஆட்டோமொபைல் உதரிபாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் கூட கியா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டன. கியா நிறுவனம் தொழில் தொடங்கி இருந்தால், ஏராளமான நிறுவனங்களுக்கு லாபமாக இருந்திருக்கும். இப்போது அந்த சிறிய நிறுவனங்களுக்கும் பெரிய இழப்பாகும்

இந்த சூழலில் கியா நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு வெளியேறுவதாக எங்களிடம் தெரிவித்தது. ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் தொழில்தொடங்க முடிவு ெசய்ததது. அந்த பகுதி வறண்ட, பாலைவனமாக இருந்தபோதிலும், முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறுவனத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு-ஐதராபாத் தேசியநெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதையடுத்து, கியா நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்ய இருக்கிறது.

இந்த விசயம் கேள்விப்பட்டு தமிழகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் கியா நிறுவனத்திடம் கெஞ்சினார்கள், மீண்டும் தமிழகத்துக்கு வாருங்கள், தேவையான வசதிகளை செய்து தருகிறோம் என்று கூறினார்கள் ஆனால், கியா நிறுவனம் தமிழகம் வர மறுத்துவிட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும் இதேபோல முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் உத்தரவாதங்களை அவர் அளிக்க தயங்கினார். ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் முன்நின்று செய்கிறார்.

அதுமட்டுமல்லாமல், முதல்வர் எடப்பாடி பழனிச்்சாமி தலைமையிலான அரசில் இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவர் கியா நிறுவனம் மட்டுமல்லாது, ஐரோப்பிய நிறுவனங்களிடமும் தொழில்தொடங்க “பெரும்” தொகையை லஞ்சமாக கேட்டு முரண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நிறுவனங்கள் டெல்லியில் உள்ள தங்களின் தூதரகத்தில் புகார் செய்துள்ளன. அந்த புகாரும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், எந்த நேரமும் அந்த அமைச்சர் மீது நடவடிக்கை பாயலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் அரசியல்வாதிகளின் லஞ்ச ஆசை காரணமாகவே எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலம் என்ற பட்டியலில் இருந்து தமிழகம் பின்தங்கி வருகிறது. கடந்த 2015ம்ஆண்டு 12-வது இடத்தில் இருந்தநிலையில், 2016ம் ஆண்டு 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஊழலிலும் தமிழகம் தலைவிரித்தாடுகிறது.சமீபத்தில், மத்திய ஊடக கல்வி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஊழல் செய்யும் மாநிலங்களில் கர்நாடகம், ஆந்திர மாநிலத்துக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

இது குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் கேட்டபோது “ தமிழகத்தில் இப்போதுள்ள நிலையில், புதிய தொழிற்சாலை அமையும் என்பதை மறந்துவிட வேண்டும். கோவை, திருப்பூரில் உள்ள நிறுவனங்களே , அதிகாரிகளின் ஊழல், மின்தட்டுப்பாடு, குடிநீர்தட்டுப்பாட்டால் திணறி வருகின்றன” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு முன்னணி ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிபர் ஒருவர் தமிழக அரசிடம் தலைமைச் செயலகத்தில் வந்து,தனது நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அந்த குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி, குறிப்பிட்ட துறை அமைச்சரைச் சந்தியுங்கள், அவரின் தேவையை முதலில் நிறைவேற்றிவிட்டு வாருங்கள் என்று தெரிவித்தாராம்.

PREV
click me!

Recommended Stories

என்னடா இது வம்பா போச்சு.. திங்கள் கிழமை அதுவுமா தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மின்தடை!
நாளுக்கு நாள் முற்றும் செவிலியர்களின் போராட்டம்.. அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும் திமுக.. அன்புமணி ஆவேசம்