
தஞ்சாவூர்
தஞ்சாவூரில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடக்கும் போராட்டம் 15-வது நாளாக தொடர்கிறது.
தஞ்சாவூரில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த 15 நாள்களாக தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
“தமிழக அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும்.
பணிக்காலத்தின்போது இறக்கும் அரசு மருத்துவரின் குடும்ப நலன் காக்க நிதி தொகுப்பை உருவாக்க வேண்டும்.
பெண் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு கொடுப்பது போல குழந்தை பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவமனை மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மருத்துவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்களும் கடந்த இரண்டு நாள்களாக பேரணி, மனித சங்கிலி, காத்திருப்பு போராட்டம் போன்ற போராட்டங்களை ஈடுபடுகின்றனர்.
மூன்றாவது நாளான நேற்று மருத்துவர்கள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கை, வாயில் கருப்புதுணி கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆடலரசி தலைமைத் தாங்கினார். இதில், 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
“இந்த நிலையில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதில் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.