
சிவகங்கை
இளையான்குடி ஒன்றியத்தில் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி தலைமைத் தாங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முத்துராமன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், சிவகங்கை மாவட்டத் தலைவர் அழகர்சாமி, ஒன்றியச் செயலாளர் சந்தியாகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின்போது, சூராணம், உதயனூர், ஆக்கவயல் ஆகிய ஊராட்சிகளின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், “இளையான்குடி ஒன்றியத்தில் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,
விவசாயிகளுக்கு 2015 – 2016-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்க வேண்டும்,
55 ஊராட்சிகளை உள்ளடக்கிய இளையான்குடி ஒன்றியத்தைப் பிரித்து சாலைக்கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்,
இளையான்குடி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
உதயனூர் பகுதியில் உப்புத் தண்ணீரை சுத்தகரிப்பு செய்து வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.