
சேலம்
ரேசன் கடைகளில் மாதம் 30 கிலோ அரிசி வழங்க வேண்டி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க வட்ட செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லதா சிறப்புரையாற்றினார்.
“காடையாம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்,
ரேசன் கடைகளில் மாதம் 30 கிலோ அரிசி வழங்க வேண்டும்,
100 நாள் வேலை திட்டத்தில் 200 நாள் வேலை வழங்க வேண்டும்,
பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட பொருளாளர் குழந்தைவேல், மாவட்ட துணைத்தலைவர் அரியா கௌண்டர், வட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணியிடம் மனு அளித்தனர்.