
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுக்க தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு, நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று 16வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த வேலை நிறுத்தத்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் 1,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டாக்டர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், சில நோயாளிகள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த,நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மருத்துவர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் பொது மக்களும் ,ஏழை எளிய மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரம் மருத்துவர்கள் போராட்டத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.