
தூத்துக்குடி
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அல்போன்ஸ் லிகோரி, முனியாண்டிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஓய்வுப் பெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சாம்பசிவன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
"கடந்த 1-1-16 முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
மத்திய அரசு வழங்கியது போன்று குறைந்தபட்ச ஓய்வூதியத்துடன் ரூ.9000 வழங்க வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சிச் செயலாளர், வருவாய் கிராம ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,
மத்திய அரசு போன்று மாதம் தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும்" உள்ளிட்டக் கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரவியம் நன்றித் தெரிவித்தார்.