
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டமான ஜாக்டோ-ஜியோ போராட்டம் பற்றிய விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி கிருபாகரன் முன்பு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ-ஜியோ அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். அவரது கருத்துகள் விமர்சனத்துக்கு உள்ளாயின.
அதே நேரத்தில், வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, சமூக வலைத்தளங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் விமர்சிக்கப்படுவது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதை அடுத்து, நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பேஸ்புக்கில் விமர்சனங்கள் எழுந்தன. அதில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியினைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி என்பவரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்த விசாரணையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென இன்று, நீதிமன்ற மாண்பினை அவமதிப்பு செய்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.