
பெண்ணிடம் இருந்து ரவுடிகள் பறித்துச் சென்ற தங்க சங்கிலி, மீண்டும் அந்த பெண்ணிடமே விற்பனைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை, செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெலினா (30). இவர் செங்குன்றத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், ஜெலினா வேலையை விட்டு வீடு திமும்பும்போது, பைக்கில் வந்த இருவர், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து, ஜெலினா, சோழவரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, பாடியநல்லூரைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சுரே என்கிற சுரேந்தர் (30), ராதாகிருஷ்ணன் (30), ஜெலினாவிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், சுரேந்தரும், ராதாகிருஷ்ணனும், ஜெலினாவிடம் பறித்துச் சென்ற தங்க சங்கிலியை, பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி லட்சுமியிடம் கொடுத்து விற்று பணம் வாங்கி வர கூறியுள்ளனர்.
ராஜலட்சுமியும், தங்க சங்கிலியுடன், ஜெலினா வேலை செய்யும் நகைக்கடைக்கு சென்று விற்கும்படி கேட்டுள்ளார். தங்க சங்கிலியைப் பார்த்த ஜெலினா அதிர்ச்சியானார்.
இதையடுத்து, ராஜலட்சுமியை இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், ராஜலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சுரேந்தர், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.