பண்டிகை காலங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது - ஸ்டிரைக்கை கேன்சல் செய்த போக்குவரத்து ஊழியர்கள்...!

First Published Sep 25, 2017, 3:20 PM IST
Highlights
The fight has been postponed so as not to affect civilians in festive seasons


பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கக்கூட்டாது என்பதற்காக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்துவது, தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இதற்கு தமிழக அரசு ஒத்துவராததால் வரும் 24 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. 

இதில் போக்குவரத்து துறை அமைச்சருடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள்  பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கக்கூட்டாது என்பதற்காக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

click me!