
ஈரோடு
ஜி.எஸ்,டியில் நெசவுத் தொழிலுக்கு விலக்கு கேட்டு ஐந்தாவது நாளாக கடையடைப்பு போராட்டம் செய்த நெசவு வியாபாரிகள் மனிதசங்கிலிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஐந்து நாள்களில் மொத்தம் ரூ.150 கோடி இழப்பு என்று வணிகர்கள் வருத்தப்பட்டனர்.
மத்திய அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள், சிறு – குறு வணிகர்கள், நெசவுத் தொழில் சார்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து.
நெசவுத் தொழிலை காப்பாற்ற சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து நெசவுத் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று, ஜி.எஸ்.டிக்கு விலக்கு கேட்டு ஈரோட்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய கடையடைப்புப் போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நெசவு மொத்த வியாபாரிகள் முழுமையாக கடைகளை அடைத்திருந்தனர்.
இதுபோல் சாயப்பட்டறைகள், பிரிண்டிங் பட்டறைகள், விசைத்தறி கூடங்கள் என நெசவு சார்ந்த தொழில் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
ஐந்தாவது நாளான நேற்று நெசவு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என்று ஏராளமானோர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் கூடினர். பின்னர் அங்கிருந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பிருந்தாவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அனைவரும் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர்.
சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கூறியது:
“சரக்கு மற்றும் சேவை வரி நெசவுத் தொழிலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வரி நீடித்தால் ஈரோட்டில் நெசவுத் தொழில் கேள்விக்குறியாக மாறிவிடும். தற்போது நெசவு நிறுவனங்களில் கூலித் தொழில் செய்து வரும் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.
எனவேதான் நாங்கள் இந்ப் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். ஐந்து நாள்களில் தினசரி சராசரி ரூ.30 கோடி வீதம் ரூ.150 கோடி நெசவு உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்வாட் வரி போராட்டத்தில் ஈரோடு நெசவு வியாபாரிகள் வெற்றி பெற்றதுபோல இந்த சரக்கு மற்றும் சேவை வரி போராட்டத்திலும் வெற்றி பெறுவோம். எங்கள் நியாயமான கோரிக்கையை மத்திய – மாநில அரசுகள் பரிசீலனை செய்து நெசவுத் தொழிலுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.