
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆறு மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி அருகே உள்ள வேலூர் - அன்னம்பட்டி பஞ்சாயத்தில் சுமார் ஐந்நூருக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடுமையான வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது.இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சினம் கொண்ட அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்குச் சென்றதால் அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
இதனால் மக்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனும் அங்கு வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாகக் கலைந்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.