அதிமுக,பாஜகவை வாரி சுருட்டிய திமுகவின் சுனாமி அலை.! 40க்கு 40 வென்று இபிஎஸ்,அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jun 4, 2024, 11:38 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை வொயிட் வாஷ் செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 


கருத்து கணிப்பும் தேர்தல் முடிவும்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இரண்டு மாத காலம் திருவிழாவாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் எனவும், இந்தியா கூட்டணி 150 இடங்களை கூட தாண்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் தமிழகத்தில் பாஜக 16 இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்து கணிப்பு கூறியது. இந்தநிலையில் இன்று  உலகமே எதிர்பார்த்த வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே போட்டி நீடித்தது. நீயா நானா என்ற போட்டி கடைசி வரை தொடர்ந்தது. கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி 230 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியும் 295 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய இலக்கை தொட்டது

Tap to resize

Latest Videos

40க்கு 40 - திமுக கூட்டணி 2004 டூ 2024

மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்ட நிலையில் பாஜகவின் கொண்டாட்டங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் அமைதியாகவே காட்சி அளித்தது. இந்தநிலையில் தமிழகத்தில் 2004ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 40 இடங்களை வென்றது. அதே போல நிகழ்வை மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து ரீ கிரியேட் செய்துள்ளார் ஸ்டாலின். 2004ஆம் ஆண்டு  திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் திமுக 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாமக 6 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், சிபிஐஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் என திமுக கூட்டணி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மீண்டும் திமுக கூட்டணி வெற்றி

எதிர்த்து களம் இறங்கிய அதிமுக 33 இடங்களிலும், பாஜக 7 இடங்கள் என போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற 2009 தேர்தலில் திமுக கூட்டணி 28 இடங்களிலும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் வென்றது. 2014 தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. திமுக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற 2019ஆம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது. தேனி தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் 2004ஆம் ஆண்டை போல் தற்போதும் 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி தன் வசப்படுத்தியுள்ளது. 

கொண்டாடும் திமுகவினர்

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய போதே திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக ஒரு இடத்திலும் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. சிறிது நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக ஒரு தொகுதியில் முன்னனியில் இருந்தது. கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்றுவரை முன்னிலையில் இருந்த பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணியிடம் கடைசி சுற்றில் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் கடுமையாக போராடினார்.

இந்தநிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக, பாஜக, பாமக கட்சிகளை வொயிட் வாஷ் செய்துள்ளது திமுக. இந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

click me!