சோழ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு…

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
சோழ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு…

சுருக்கம்

சேலம் மாவட்டத்தில், சோழ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு என்றும், எதிரிகளை தடுத்து நிறுத்தி உயிர் நீத்தவனை போற்றும் வகையில் வெட்டப்பட்ட கல்வெட்டு என்றும் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா அருநூத்து மலைப்பகுதியில் சிறுமலை என்ற மலைக்கிராமம் உள்ளது.

சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் பொன்னம்பலம், ஜீவநாராயணன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சுகவன முருகன், சீனிவாசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், பெரியார் மன்னன் ஆகியோரை கொண்ட குழுவினர் சிறுமலை பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமலை மாரியம்மன் கோவில் அருகே உள்ள வயலில் இருந்த ஒரு கல்வெட்டை கண்டுபிடித்து அதனை ஆய்விற்கு உட்படுத்தினர்.

அந்த ஆய்வின் முடிவில், கி.பி.1202–ஆம் ஆண்டு சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் 24–ஆம் ஆட்சியாண்டில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது என்றும், 12–ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் மொத்தம் 14 வரிகளில் எழுத்துகள் உள்ளன என்றும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

கல்வெட்டில் காணப்படும் சிறுமலை என்ற பெயரிலேயே 814 ஆண்டுகள் கழித்தும் இந்த ஊர் சிறுமலை என்ற அதே பெயரில் அழைக்கப்படுவது சிறப்பானது.

12–ஆம் நூற்றாண்டில் சோழர்களின் கீழ் ஒரு குறுநில நாடாக ஆறகளூரை தலைநகராக கொண்டு மகதை நாடு இருந்தது. இந்த மகதை நாட்டின் எல்லைக்குள் சிறுமலை கிராமம் இருந்துள்ளது.

மகதை நாடாழ்வான் என்பவர் அப்போது மகதை நாட்டின் மன்னராக இருந்துள்ளார். இவரின் பிரதிநிதியாக சேலஞ்சுற்றி என்பவர் சேலம் பகுதிக்கு பொறுப்பு வகித்துள்ளார்.

மகதைநாட்டு சிறுமலைப்பகுதியில் இருந்த தோட்டப்படப்பை என்ற பகுதியைச் சேர்ந்த அரணமுடையான் புயிலன் சேந்தனான கேசஞ் என்பவன் எதிரிகள் தன் நாட்டை அழிக்க படையெடுத்து வந்த போது, அந்த படையை தடுத்து நிறுத்தினான். அந்த போரில் அவனும் இறந்து விட்டான்.

தன் நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அந்த வீரனைப் போற்றும் வகையில் ஒரு நடுகல் வைக்கப்பட்டது. அந்த கல்லில் தான் இந்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது” என்று சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?