செல்லாத நோட்டுகளால் மக்கள் படும் துயரங்களை அறிய ஆய்வு…

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
செல்லாத நோட்டுகளால் மக்கள் படும் துயரங்களை அறிய ஆய்வு…

சுருக்கம்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் துயர்ங்களை மக்களிடம் கேட்டறிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் மக்கள் வங்கிகளை படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் புதிய ரூ.2000 நோட்டிற்கு சில்லறை கிடைக்காமல் சாமானிய மக்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருவது தொடர்கிறது.

இதையடுத்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள், விளைவுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட மக்களிடம் கேட்டறிவதற்கு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில், ஓட்டல் உரிமையாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் பொதுநல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தின்போது, ரூ.2000 நோட்டிற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் படும் அவதிகள் குறித்தும், செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000-ஐ மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் மாற்ற முடியாமல் தவிப்பது குறித்தும், திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்கு பெரிய தொகைகளை மக்கள் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாவது குறித்தும் பலதரப்பட்ட நிர்வாகிகளும் எடுத்துரைத்தனர்.

இந்த குறைகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பதில் கூறினார்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி, துறையூர் மெயின்ரோட்டில் உள்ள கனரா வங்கி மற்றும் அதன் கருவூலம், பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்டேட் வங்கி மற்றும் அதன் ஏ.டி.எம். மையம், பொன்மனப்பாடியில் உள்ள கூட்டுறவு சங்கம், பால்உற்பத்தியாளர் சங்கத்தை நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் முன்னிலையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். அப்போது வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களிடம் குறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் பணபரிவர்த்தனைகளுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட விதிமுறைகளை சரியாக கடைபிடிக்குமாறு வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதிகாரிகள் ஆய்வு காரணமாக, பெரம்பலூர் வங்கிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன்குமார் காரில் திருச்சி புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், புதுவாழ்வு திட்ட அலுவலர் ரூபவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் பிரவீன்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிகள் குறித்து கேட்பதற்காக தமிழகம் முழுவதும் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பலதரப்பட்ட நிர்வாகிகள் கூறிய கருத்துகளை மத்திய அரசுக்கு அறிக்கையாக வருகிற 25-ந்தேதி சமர்ப்பிக்க உள்ளேன். தங்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு எடுக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று அவர் கூறினார்

PREV
click me!

Recommended Stories

விஜய் எனக்கு ஒரு பொருட்டே இல்லை..! விஜய் கொண்டையை இரண்டாக பிளந்த எடப்பாடி பழனிச்சாமி
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?