
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் மலைப் பகுதியில் உள்ள மரத்தில் இறந்து மூன்று நாள்களாக தூக்கில் தொங்கியவாறு இருந்த அழுகிய ஆண் சடலத்தை காவலாளர்கள் மீட்டனர். சடலத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ளது நட்டாலம். இங்குள்ள ஆனைப்பாறை மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து சந்தேகமடைந்த அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியவாறு, அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். உடனே நிகழ்விடத்திற்கு வந்த காவலாளர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் மார்த்தாண்டம் அருகே புலிப்பனம் பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் (48) என்பது தெரியவந்தது.
அவர், அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் வேலைப் பார்த்து வந்ததும், உயிரிழந்து மூன்று நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும் காவலாளர்கள் தெரிவித்தனர்.
இன்பராஜ் இறந்ததற்கான காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.