
காஞ்சிபுரம்
வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு உறுப்பினர்கள் ஜி.நாகமோகன், முகேஷ் குமார், எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம் நகராட்சிப் பகுதிகளை பார்வையிட்ட அவர்கள் பம்மல் நகராட்சியில் உள்ள சங்கர் நகரில் மழையால் சேதமடைந்த தார்ச் சாலைகளை பார்வையிட்டனர். சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கே தகுதியற்ற நிலையில் உள்ளதால் மக்கள் சிரமப்படுவதை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
பின்னர், சீனிவாசபுரம் பிரதான சாலையில் சேதமடைந்த பகுதிகள், மழைநீர் வடிகால்வாய்களை பார்வையிட்டபோது, சீனிவாசபுரம் அடையாறு ஆறு தூர்வாரப்பட்டு அகலபடுத்தியிருந்ததை குழுவினர் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அனகாபுத்தூர் நகராட்சி பாரிநகரில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புகைப்பட கண்காட்சி மூலம் பார்வையிட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதையும் சாலைகள் வழியாக மழைநீர் செல்வதையும், மழைநீரை அகற்றியதையும் ஆட்சியர் பொன்னையா மத்திய குழுவினருக்கு விளக்கினார்.
மேலும், பாதிப்புக்கு உள்ளான இடங்களில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டப் பணிகளையும் சேதமடைந்த சாலைகளை சீர்செய்து நிரந்தரத் தீர்வு காண மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மத்திய குழுவினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்லாவரம் நகராட்சி சுவாமிமலை நகரில் மழை பாதிப்புகள், சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றை புகைப்படத்தின் மூலம் ஆட்சியர் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.
பின்னர், சுவாமி மலை நகர், பூபதி நகரில் சேதமடைந்த சாலைகளையும், மழைநீர் வடிகால்களையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது, ஆட்சியர் பொன்னையா, வருவாய்த் துறைச் செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.