
சென்னையில் ஹெ.சி.டி.எஃப்.சி வங்கியின் 3 ஏடிஎம்களில் பணம் நிரப்ப பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி சுமார் 24 லட்சம் ரூபாய் பணத்தைக் சிஸ்கோ நிறுவன ஊழியர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலியை சேர்ந்தவர் குமார். இவர் வங்கியில் பணத்தை நிரப்பும் சிஸ்கோ நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில், கொளத்தூர் ஜி.கே.எம்.காலணி மற்றும் அயனாவரம் பகுதியில் உள்ள எச்.டி.எஃப்.சி. ஏடிஎம் மையங்களில் பெரும்தொகை காணாமல் போனது.
இதுகுறித்து சிஸ்கோ நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பணம் காணாமல் போன இரண்டு ஏ.டி.எம் மையங்களிலும் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சிஸ்கோ நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமார் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப பயன்படுத்தப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, 18 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதேபோல், எம்.டி.ஹெச். சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.