வண்டலூர் பூங்காவில் முதன்முதலாக ஆன்லைன் டிக்கெட் பதிவு அறிமுகம் - பொங்கலை முன்னிட்டு துணை இயக்குனர் அறிவிப்பு...

First Published Dec 30, 2017, 6:35 AM IST
Highlights
The first ticket booking online in Vandalur park - Deputy Director of Pongal


காஞ்சிபுரம்

வண்டலூர் பூங்காவில் முதன் முதலாக  ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக பூங்கா துணை இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குனர் சுதா செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.

அப்போது, "வண்டலூர் உயிரியல் பூங்காவில் வருகிற பொங்கல் விழாவை முன்னிட்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 1 இலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 14, 15, 16 தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5½ மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 30 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வனத்துறை மற்றும் காவல் துறையை சார்ந்த பணியாளர்கள் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பார்வையாளர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்காக நாற்காலி, மேசை வசதியுடன் உணவு சாப்பிடும் இடம் ஒன்று நுழைவுவாயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பூங்கா விலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவளிப்பதை தவிர்க்கும் பொருட்டு விலங்கு இருப்பிட பகுதிகளுக்குள் உணவு பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை உள்ளே கொண்டுச் செல்ல அனுமதி இல்லை. இவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கு பொருட்கள் வைப்பறை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்பொழுது உள்ள வசதிகளுடன் மேலும் சுமார் 1500 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடம் ஒன்று வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ளது.

பார்வையாளர்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைக்க ஆங்காங்கே கூடுதலாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது பார்வையாளர்களின் வசதிக்காக காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து வனத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிக்காத வகையில் பார்வையாளர்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களின் நெரிசலை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் வன மண்டலங்களில் இருந்து 130–க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எதிர்பாராத தீ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு வாகனம் ஒன்று காணும் பொங்கல் அன்று தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவ குழு ஒன்று காணும் பொங்கல் அன்று அவசர ஊர்தி வாகனத்துடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150–க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக 200–க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பூங்காவிற்கு வரும் மக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலித்தீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மேற்படி பொருட்களை கொண்டுவரும் பார்வையாளர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

 

click me!