ஓகி புயலில் மத்திய, மாநில அரசுகள் மனித உரிமை மீறல் செய்திருக்கின்றன - உண்மையை கண்டறியும் குழு பகிரங்க குற்றச்சாட்டு...

First Published Dec 30, 2017, 7:43 AM IST
Highlights
Central and state governments have violated human rights violations -


கன்னியாகுமரி

ஓகி புயலில் மத்திய, மாநில அரசுகள் மனித உரிமை மீறல் செய்திருக்கின்றன என்றும் இதனை ஐ.நா சபையில் தெரிவிப்போம் என்றும் உண்மையை கண்டறியும் குழு பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

ஒகி புயல் பாதிப்பு குறித்து உண்மை கண்டறியும் குழு தலைவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமையில் கடந்த 28 மற்றும் 29-ஆம் தேதிகளில்  ஆய்வு நடத்தினர்.

அந்தக் குழுவின் உறுப்பினர்களாக உள்ள மாநிலப் பெண்கள் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் ராமாத்தாள், மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹோலிஸ் பட்டீல் உள்ளிட்டோர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அதில், "ஓகிபுயல் பாதிப்புகள் குறித்த உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வு அறிக்கையை ஜனவரி 10-ஆம் தேதி நாகர்கோவிலில் வெளியிடுகிறோம். பின்னர் மத்திய, மாநில அரசுகளிடம் அறிக்கையை சமர்ப்பிப்போம்.

தேசிய பேரிடர் மேலாண்மை முறையாக இயங்கவில்லை.  புயல் வரும் என முன் கூட்டி தகவல் தெரிவிக்காத அளவுக்கு தேசிய பேரிடர் மீட்பு இருக்கிறது.

மாவட்டத்தில் இன்னும் மீட்புப் பணிகள் முடியவில்லை.  பயிர்கள் பெரிய அளவில் சேதமாகியிருக்கிறது. இதற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் போதுமானதாக இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பேரிடர் மேலாண்மை உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டாக இருந்தது. அதை நான்காக குறைத்துவிட்டனர்.  

தேசிய பேரிடர் குழுவின் தலைவராக பிரதமர் உள்ளார். அவருக்கு பல பணிகள் இருக்கும் என்பதால் துணைத் தலைவர்தான் செயல்பட வேண்டும்.   ஆனால், அந்த துணைத் தலைவர் பதவியில் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.  புயலுக்கு பின் தேடுதல் தாமதமாக இதுதான் காரணம்.

அரக்கோணம், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கப்பல், விமானபடைத் தளம் இருக்கிறது. உடனடியாக இவைகளை கொண்டுவந்து மீனவர்களை தேடியிருக்கலாம்.

ஓகி புயலில் மத்திய, மாநில அரசுகள் மனித உரிமை மீறல் செய்திருக்கின்றன. இதை ஐ.நா. சபையில் சமர்ப்பிப்போம்" என்று அதிரடியாக தெரிவித்தனர்.

click me!