
முதல்வர் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுடன் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரிய மனுவும் சேர்த்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்குகள் நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய தவே, எம்.எல்.ஏக்கள் எந்த கட்சிக்கும் தாவாத பட்சத்தில் அவர்களை தகுதிநீக்கம் செய்து பதவியை சபாநாயகர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என தெரிவித்தார்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எம்.எல்.ஏக்களின் கோரிக்கை; முதல்வரை மாற்றினால் அரசுக்கு ஆதரவளிக்க எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளதாகவும் அதிருப்தி என்பதும் கட்சித் தாவல் என்பதும் முற்றிலும் வெவ்வேறானவை என வாதாடினார்.
மேலும் முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெறுவதற்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும் எம்.எல்.ஏக்களுக்கு உரிமை உள்ளது. பெரும்பான்மை இல்லாததால் குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் நடவடிக்கை ஜனநாயக அமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார் தவே.
சபாநாயகர் தரப்பில் வாதாடிய அரிமா சுந்தரம், அரசு சார்பில் விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை, மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் என உத்தரவிட்டார். அதேநேரத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்க மறுத்த நீதிபதி, வழக்கின் விசாரணை முடியும்வரை எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.
மேலும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர், முதல்வர், கொறடா ஆகிய மூவரும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு முதல்வருக்கு சற்று சோர்வை ஏற்படுத்தினாலும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை செல்லாது என அறிவிக்க நீதிமன்றம் மறுத்தது முதல்வருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.