
விவசாயி நிலத்தில் கிடைத்த 5 சிலைகளை கைப்பற்றி அதை சிலை கடத்தல்காரர்களிடமே விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷாவுக்கு அக்டோபர் 6 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது அங்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த காதர்பாட்ஷா, தலைமைக் காவலராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்ட போலீஸார் சிலைகளை கைப்பற்றிசென்னையில் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விற்றுள்ளனர்.
இதையறிந்த கான்ஸ்டபிள் ஒருவர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதைவைத்து யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தலைமை காவலர் சுப்புராஜை மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷாவை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர், கடந்த 13 ஆம் தேதி அவர் கைது செய்யப்பாட்டார். நீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கில் 5 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, காதர் பாட்ஷாவுக்கு அக்டோபர் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.