
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி கையும் களவுமாக சிக்கினார். இதனால் பிப்ரவரி 3ம் தேதி கணபதி லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, துணைவேந்தரின் அலுவலகம், வீடு, பதிவாளர் அலுவலகம், பேராசிரியரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதனிடையே, கணபதி, தர்மராஜ், தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து முன்னாள் துணைவேந்தர் கணபதி, தர்மராஜ் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கணபதி, தர்மராஜை ஆகியோரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் கோவை நீதிமன்றம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.