
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவிகளுடன் பேசுவதாக கூறி பண மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், சங்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). இவர் கடந்த சில ஆண்டுகளாக மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆவிகளுடன் பேசுவதாகவும், அதற்கான சக்தி தன்னிடம் இருப்பதாகவும், பலரை ஏமாற்றி வந்துள்ளார் கார்த்திகேயன். ஆவிகளுடன் பேச பயிற்சி அளிப்பதாக ஏமாற்றி பொதுமக்கள் பலரிடம் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளார்.
குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும், மாந்திரீக பயிற்சிக்காகவும், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கார்த்திகேயன், தன்னை ஏமாற்றியதாக, வேலூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அவரது புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், அது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், கார்த்திகேயன், பெரம்பலூர் கீத்துக்கடை பகுதியில் மருதடியில் ஆசிரமம் வைத்து, மனித மண்டை ஓடுகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகேயன் ஆசிரமம் சென்ற போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.