
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்தனர். இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தூத்துக்குடி புதிய கலெக்டராக பதவி எற்ற சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
பலியான 13 பேர் உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனைஅறிக்கை கிடைத்தவுடன் அதன் தன்மையைப் பொறுத்து மறு உடற்கூறு ஆய்வு தேவை குறித்து முடிவு செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய கலெக்டர் சந்தீப்; துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீஸ் தரப்பில் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்துள்ளனர். தூத்துக்குடியில் நிலவி வரும் பதட்டமான சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பாக வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும், போலீசார் வீடு வீடாக ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எங்களிடம் வைத்துள்ளனர்.
அதுதொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு உணவு, பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசின் முடிவும் அதுவே என முதல்வர் அறிவித்து உள்ளார்.
அதன்படி முதல்கட்டமாக ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் உரிமம் புதுப்பித்தல் சான்று இதுவரை வழங்கப்படவில்லை. அந்த சான்று இருந்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை செயல் பட முடியும்.
ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.