சிகிச்சைக்கு பணம் தராததால் வாலிபரின் உடலுறுப்பை திருடிய சேலம் மருத்துவமனை...! டென்ஷனான பினராயி விஜயன் எடப்பாடிக்கு கடிதம்

First Published May 25, 2018, 12:55 PM IST
Highlights
Pinarayi Vijayan letter to Edappadi Palanisamy


சிகிச்சை அளித்துவிட்டு, கட்டணத்திற்காக உடலுறுப்பை திருடிய சேலம் மருத்துவமனை மீது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கில்லிகுரிஷி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் சென்னை புறப்பட்டு வந்துள்ளார். அவர் வந்த வாகனத்தில் 6 பேர் உடனிருந்தனர்.

வாகனம், சேலம் மீனாட்சி புரம் அருகே வந்தபோது விபத்துக்குள்ளாகியது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மணிகண்டனை மீட்ட அருகில் இருந்தோர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

மணிகண்டனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அதாவது மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம், அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ கட்டணமாக 3.25 லட்சம் ரூபாயும் கேட்டுள்ளது.

இவ்வளவு பணம் இல்லை என்று அவரது உறவினர்கள் கூற, மணிகண்டனின் உடலுறுப்புகளை எடுத்துக் கொண்டு, உடலை உறவினர்களிடம் அளித்துள்ளது. மணிகண்டனின் உடலில் இருந்து உறுப்புகளை எடுப்பதற்கு முன்னர், உறவினர்களிடம் இருந்து கட்டாய கையெழுத்தும் பெற்றுள்ளது.

இது குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தனது பேஸ்புக் பக்கத்தில், உடலுறுப்புகளை பறித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த அந்த மருத்துவமனைக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பினராயி விஜயன் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

click me!