
தூத்துக்குடி
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் பயணியர் விடுதி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர உதவிச் செயலர் முனியசாமி தலைமைத் தாங்கினார். செல்லையா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
"கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
மழையால் சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலர் பரமராஜ், மாதர் சங்கத்தைச் சேர்ந்த சரோஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அலாவுதீன், துரைபாண்டி, இராமசாமி, சத்தியநாதன், சண்முகவேல், செந்தில்பாபு, ஜோசப், ராமகிருஷ்ணன், ரஞ்சிதம் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.