
தூத்துக்குடி
தமிழக வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்திற்கு 26 வருடங்கள் ஆகியுக் இழப்பீடு தராததால் நிலத்தை திருப்பி கேட்டு கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஆலம்பட்டி பஞ்சாயத்தில், கடந்த 1991–ஆம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரியம் 12 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தியது.
நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் வீதம் இழப்பீடு தருவதாக சொன்னார்களாம். ஆனால், இதுவரையிலும் விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. மேலும், கையகப்படுத்திய அந்த நிலத்தையும் அரசு இதுவரையிலும் பயன்படுத்தவில்லை.
எனவே, "வட்டியுடன் கணக்கிட்டு அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அல்லது கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி, இந்திய விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு சங்க மாவட்டச் செயலாளர் சேசு நாயக்கர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இரங்கநாயகலு, மாவட்டத் துணைத் தலைவர் பரமேசுவரன், ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
உதவி ஆட்சியர் அனிதா அலுவலக பணியாக வெளியேச் சென்றிருந்தார். எனவே, உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.