
திருவாரூர்
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் நிரப்பாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தனியார் பள்ளிக் கட்டண உயர்வைத் தடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்" உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி, நேற்று திருவாரூர் விளமல் கல்பாலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகப் போராட்டத்தில் ஈடுபட பேரணியாக புறப்பட்டனர்.
அந்தப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார். பேரணி தஞ்சை சாலை வழியாக சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது.
அங்கு அலுவலக வாசல் கதவை மூடி காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்ததால் இருவருக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு உட்கார்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் கவிநிலவன், மணிகண்டன், மதன், சுர்ஜித், முகேஷ்கண்ணன், வெங்கடேசன், அன்பழகன், சத்தியசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, "வேண்டும் வேண்டும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வளாக கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர், மின்வசதி செய்து தர வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின்னர், மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.