
திருநெல்வேலி
திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மருத்துவ மாணவர்கள் எட்டாவது நாளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கடந்த நவம்பர் மாதம் நடந்த சிறப்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும்.
அரசுப் பணியில் இருக்கும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்தாய்வை ‘‘எம்.ஆர்.பி.’’ கலந்தாய்வுக்கு முன்பு நடத்த வேண்டும்.
அனைத்து வகையான பணி அமர்த்தல்களை கட்டாய கிராமப்புற சேவையில் இருந்து தொடங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28–ஆம் தேதி முதல் நாள்தோறும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எட்டாவது நாளாக நேற்று மருத்துவமனை வளாகத்தில் மாணவ–மாணவிகள் கையில் தட்டுக்களை ஏந்திப் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். ஒருசிலர் கண் மற்றும் வாயில் கருப்பு துணிகளையும் கட்டியிருந்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் எட்வின் கிங்ஸ்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பசுபதி, துணைத் தலைவர் ராம்பிரசாத், துணைச் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவர்களுடன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்களும் பங்கேற்றனர். மேலும், போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் பங்கேற்று ஆதரவுத் தெரிவித்தப் பேசினார்.