
திருநெல்வேலி
திருநெல்வேலியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - மூலைக்கரைப்பட்டி சாலையில் உள்ள தெற்கு இளையார்குளத்தைச் சேர்ந்தவர் பொன் பெருமாள் (35). இவருடைய மனைவி லதா (30). இவர்களுடைய மகள் சுவேதா (5).
சுவேதா, மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தாள். அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அவரது பெற்றோர் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். ஆனாலும் சுவேதாவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
பின்னர், அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது சுவேதாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து சுவேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டு ஐந்து வயது சிறுமி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.