
ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சு கழிவுகளில் இருந்து, தங்கள் வருங்கால சந்ததியை பாதுகாக்க போராடிய மக்கள் மீது, அரசாங்கம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர்.
அவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மட்டும் தான். தொடர்ந்து தூத்துக்குடியில் போராடி வரும் மக்கள் பலரும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்சியர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த22 ஆண்டு காலமாக இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற் சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்தது
அதன் அடிப்படையில், மறைந்த முதலமைச்சர் 29.3.2013 அன்று ஆலையை மூட உத்தரவிட்டார் அதன் பேரில் ஆலைக்கு மின் இணைப்பை உடனடியாக துண்டித்து தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேற்கண்ட உத்தரவினை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகி, 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதி பெற்றது. அதன் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2013ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச்
மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் இதனை புதுப்பிக்க கோரிய போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதனை நிராகரித்தது.
அன்று முதல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கவில்லை. மேலும், , ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பு 24.5.2018 அன்று அதிகாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை எந்த விதத்திலும் தான் சுயமாக உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை உபயோகப்படுத்தவும் முடியாது; ஆலையை இயக்கவும் முடியாது. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உரிய முறையில் உறுதியாக எடுக்கும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.