
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 13 பொது மக்கள் பலியாகியிருக்கும் சம்பவம், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை தொடங்கிய போதே, அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
லண்டனில் உள்ள தமிழர்கள், அங்கு இருந்த ஸ்டெர்லைட் நிறுவன இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து தற்போது நடந்திருக்கும் கொடூர துப்பாக்கி சூட்டு சம்பவம் இங்கிலாந்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு உள்ள தொழிலாளர் கட்சி தலைவரும் எதிர்கட்சி எம்.பியுமான் ஜான் மெக்டொனால்டு, தூத்துக்குடியில் நடை பெற்றிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய அவர். ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்த குழுமம் பல நாடுகளிலும் இது போன்று சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
சுரங்கங்கள் தோண்டுவது, ஆலைகள் அமைப்பது, போன்ற கண்டிக்கத்தக்க பணியை செய்து வருகிறது வேதாந்த குழுமம். அமெனஸ்டி இண்டர்னேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதனை பல முறை சுட்டிக்காட்டியுள்ளன.
இது போன்ற சுற்று சூழல் மாசுபாட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கும் காரணமான வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என தெரிவித்திருக்கும் ஜான் மெக்டொனால்டு, இந்த குழுமத்தின் பங்குகளை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து ரத்து செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.