
தருமபுரி
தர்மபுரியில் குப்பைகளை அகற்ற ஆட்சியர், உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் களத்தில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்தனர். பின்னர், தூய்மையே சேவை இயக்கப் பணிகள் குறித்து மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் ஆட்சியர்.
சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு அனைத்து மாவட்டங்களிலும் “தூய்மையே சேவை” என்று வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
தூய்மையே சேவை என்று தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் சுகாதார மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுகாதார விழிப்புணர்வு பணியில் 20 தூய்மை ரதங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி குடியிருப்பு பகுதி, ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை ஆட்சியர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சாலை ஓரங்களில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஆட்சியர் ஈடுபட்டார். தூய்மை பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி ஆட்சியர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கௌரி, தாசில்தார் ஜெயலட்சுமி, ஒன்றியப் பொறியாளர் தமிழ்ச்செல்வி, உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர், தூய்மையே சேவை பணியின் நோக்கம் குறித்து மக்களுக்கு விளக்கினார்.
“பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பைகள், தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” போன்ற அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினார்.