
தருமபுரி
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைக் கண்டித்து, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சி.முரளி தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பொதுச்செயலர் எஸ்.சண்முகம், சாலை போக்குவரத்து சங்கத் தலைவர் சி.ரகுபதி, சிஐடியூ மாவட்டச் செயலர் சி.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்” என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.