மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 22—வது நாளாக போராட்டம்; இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை…

First Published Sep 21, 2017, 7:50 AM IST
Highlights
Medical college students fight for 22nd day


கடலூர்

கடலூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 22-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டம் குறித்து இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இவர்களது போராட்டம் நேற்று 22-வது நாளாக தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வராத நிலையில், நேற்று மருத்துவக் கல்லூரி புல முதல்வர்கள் திருவள்ளுவன், சிதம்பரம், ராஜசிகாமணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், “இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயித்தக் கட்டணத்திற்கு இணையாக மாற்ற வேண்டும்.

மேலும், ஏற்கனவே வசூலித்தப் பணத்தை மாணவர்களுக்கு திரும்பி வழங்க வேண்டும்,

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரிக்கு இணையாக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை நடத்துவதோடு, தேர்வுகள் அனைத்தும் அதே பல்கலைக்கழகத்தால் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை மருத்துவ கல்லூரி மாணவர்கள் முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த புல முதல்வர்கள், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், மாணவர்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால் மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

click me!