
கோயம்புத்தூர்
வேலை வாங்கித் தருகிறேன் என்று பலரிடம் ரூ.50 இலட்சத்திற்கும் மேல் மோசடி செய்தவரை கோயம்புத்தூரில் சைபர் கிரைம் காவலாளர்கள் கைது செய்து, அவரிடம் இருந்து பணம், கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், இரத்தினபுரி, சுப்பத்தாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் விஜயகுமார் (31). இவர், இணையதளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்று அதன் உரிமையாளர் அர்ஜுன் குமரேசன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, விமான நிலையத்தில் கண்காணிப்பாளர் பணி வாங்கித் தருவதாக விஜயகுமாரிடம் இருந்து ரூ.1 இலட்சம் ரொக்கத்தை அர்ஜூன் குமரேசன் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பணிக்கான ஆணையை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். விஜயகுமார், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் காட்டியபோது அது போலி என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம், விஜயகுமார் புகார் கொடுத்தார். காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அதில், தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள நரியம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமரேசன், ஆர்.எஸ்.புரம் லாலி சாலையில் நிறுவனம் நடத்தி அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக இணையதளம் வழியாக விளம்பரம் செய்து பலரிடம் ரூ.50 இலட்சத்திற்கும் மேல் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அர்ஜுன் குமரேசனை கைது செய்து, காவலாளர்கள் அவரிடம் இருந்து ரூ.5 இலட்சத்து 11 ஆயிரம் ரொக்கம், கார், ஐந்து மடிக் கணினிகள், செல்போன், கேமரா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.