Tamilnadu Rains : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‘நாளை’ உருவாக வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

By Raghupati R  |  First Published Nov 29, 2021, 7:27 AM IST

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். 


குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்குகிறது மழை. தமிழகத்தின் தலைநகரான சென்னை பல்வேறு இடங்களில் மிதந்து கொண்டிருக்கிறது.  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

‘தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். 

எனவே குமரி, நெல்லை ஆகிய  2 மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிவும் இருக்கும்.

நாளை கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும். 1-ந் தேதி (புதன்கிழமை) அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும்.  2-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

click me!