தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை சார்பில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக அமைச்சரவை கூட்டம்
திமுக அரசு பதவியேற்று 4ஆம் ஆண்டை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கவும், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கவும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
15 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகளின் மூலம், 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் 44,125 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்.
நீரேற்று, சிறு புனல் மின் திட்டங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தித் துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் (PSP) – கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) – கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சிறிய புனல் மின் திட்ட கொள்கை 2024
சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்கள் ஆகும். இக்கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். மேற்கண்ட மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயம் செய்துள்ள 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50% பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்யும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2036இல் இந்தியாவின் மக்கள்தொகை 152 கோடியைத் தாண்டும்: மத்திய அரசு தகவல்