
அரியலூர்
அரியலூரில் ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் பெண் ஒருவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் அந்தப் பெண்ணின் நிலைமை மோசமானது. இதனால், வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். போலி மருத்துவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (52). பி.எஸ்.ஸி.,கணினி அறிவியல் படித்துள்ள இவர், வேறு ஒருவரின் பெயரில் அப்பகுதியில் மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வருகிறார்.
உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசிப் போட்டும், மருந்து மாத்திரைகள் கொடுத்தும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரை கடந்த நவம்பர் 15-ஆம் தேதி காவலாளர்கள், போலி மருத்துவர் என்பதை கண்டுபிடித்து அதன்படி கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், கடந்த 21-ஆம் தேதி அவிலா சரஷா என்ற பெண்ணுக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை அளித்துள்ளார். அதில், அந்தப் பெண் மோசமாக பாதிக்கப்பட்டும், காய்ச்சல் தீவிரமடைந்ததாலும் கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை நேற்று மீண்டும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்த போலி மருத்துவர் சிகிச்சைப் பார்த்ததால் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.