
விருதுநகர்
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து இராஜபாளையம் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம், திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஏழு பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் 32 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 40 ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொலைபேசி வயர் பராமரிப்பு, துப்புரவுத் தொழிலாளர்கள், காவல் பணி மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் ரூ.8000 ஊதியமாக வழங்கப்படுகிறது என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வழக்கமாக கடந்த நவம்பர் மாதம் வழங்கப்படும் ஊதியம் இதுவரையில் வழங்கப் படவில்லை என்று பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்து, ஒப்பந்த ஊழியர்கள், இராஜபாளையம் தலைமை அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, நிரந்தரப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பலன் கிடைக்காமல்போனால் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஊழியர்கள் எச்சரித்தனர்.