ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இலங்கையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
சாந்தன் மறைவு- இலங்கை மக்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன். கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில். அங்கு பல்வேறு கட்ட அனுமதிக்கு பிறகு வவுனியா, மாங்குளம் மற்றும் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு சாந்தன் உடல் வைக்கப்பட்டது.
கதறி அழும் சாந்தன் தாய்
இதனை தொடர்ந்துநேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர புகழேந்தி, மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
சாந்தன் உடல்- இன்று இறுதி சடங்கு
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாந்தன் அவர்களது புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து சாந்தன் அவர்களது இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலை பார்த்து சாந்தனின் தாய் கதறி அழுதார். இன்று மதியம் சாந்தனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்