சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 3,032 பள்ளிகளில் இந்த தேர்வானது நடைபெற்று வருகிறது. திரளான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு மின்னஞ்ல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் பள்ளிக்கு விரைந்த போலீசார், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
undefined
பிரதமர் மோடியின் உருவப்படத்தை ரத்தத்தால் வரைந்த பெண்!
அதேபோல், கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு போலீசார் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். இன்று தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், முழுமையாக சோதனை செய்த பின்னரே மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் அனுப்பப்பட்டனர். கடந்த வாரமும் இதே போல் இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளி என பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். போலீசார் சோதனையில் அது புரளி என தெரியவந்த நிலையில், பொதுத்தேர்வு நடைபெற்று வருவம் சூழலில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.