
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற முன்னாள் மாணவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் சோகண்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வல்லம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (27) என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல நேற்று பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அதே பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் வகுப்பறைக்கு வந்தார்.
அவர், ஆசிரியை பூங்கொடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடி முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற ஆசிரியர்கள் மாணவரைப் பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த திருக்கழுகுன்றம் காவலாளர்கள் காயமடைந்த பூங்கொடியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த மாணவரை காவலாளர்கள் விசாரித்தனர். அதில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்தாண்டு இப்பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்துள்ளார். சரியாகப் படிக்காததால் பூங்கொடி அவரை அடித்ததாகவும், பள்ளி நிர்வாகத்திடம் கூறி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்ததாகவும் தெரியவந்தது.
பள்ளிப் படிப்பை தொடர முடியாத காரணத்தால் பூங்கொடியை கத்தியால் குத்தினேன் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து அந்த மாணவரை கைது செய்து, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.