
திருநெல்வேலி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 13-வது கரிசல் திரை விழா இந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் தொடர்பியல் துறை மாணவர்களின் அமைப்பான "மனோ மீடியா கிளப்" சார்பில் மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் விதமாக ஆண்டுதோறும் கரிசல் திரை விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி 13-வது கரிசல் திரை விழா இந்த மாதம் 7, 8, 9-ஆம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் துணைவேந்தர் கி. பாஸ்கர், பதிவாளர் எஸ். சந்தோஷ்பாபு, "குரங்கு பொம்மை' திரைப்படத்தின் இயக்குநர் நித்திலன் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவு விழாவில் "பூ' திரைப்பட இயக்குநர் சசி பேசுகிறார்.
சினிமா, பத்திரிகை, வானொலி, புகைப்படக்கலை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர்.
குறும்படம், ஆவணப்படம், சமூக விழிப்புணர்வு படம், ஓவியம், நாட்டுப்புற நடனம், மெளன நாடகம், பாடல், வினாடி-வினா உள்பட 14 விதமான போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பும் இளநிலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களது கல்லூரியில் உரிய அனுமதி பெற்று கலந்து கொள்ளலாம்.
உணவு, தங்கும் வசதியுடன் கூடிய பதிவுக் கட்டணமாக ரூ. 650-ம், விழாவில் மட்டும் பங்கேற்க பதிவுக் கட்டணமாக ரூ. 250-ம் பெறப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளரை 98432-15597 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.