
திருச்சி
போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற முயன்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட ஏழு பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், மருவத்தூர் கிராமம், களாரம் காட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் செந்திலின் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்து துறையூர் காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், "அப்படி ஒரு நபர் அந்த முகவரியில் இல்லை" என்பது தெரிய வந்ததையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு காவலாளர்கள் தொடர்புகொண்டனர்.
பின்னர், செல்போனில் பேசி, குறிப்பிட்ட அந்த நபரை துறையூர் காவல் நிலையத்திற்கு காவலாளார்கள் லாவகமாக வரவழைத்தனர். அவரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர், திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த புத்திசிகாமணியின் மகன் ரமேஷ் என்பது தெரியவந்தது.
மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து, பாஸ்போர்ட் பெறும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து ரமேஷ்-ஐ கைது செய்தனர்.
மேலும், அவருக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்த துறையூர் விஜயகுமார், திருச்சி விமான நிலைய பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி, பாலகிருஷ்ணன், குளித்தலையைச் சேர்ந்த உதயகுமார், திருச்சி வரகனேரியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுரேஷ், சமயபுரம் நடேஷ் ஆகிய ஆறு பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த போலி ஆவணங்கள் அனைத்தையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.