
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட ரேசன் கடை இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பராமரிப்பின்றி இருப்பதால் தனியார் சிலர் ஆக்கிரமித்து விட்டதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் ஒன்றியம், மாகான்யம் ஊராட்சிக்கு உள்பட்ட காலனிப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் ரேசன் பொருள்களை சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள மாகான்யம் ஊராட்சிக்கு உள்பட்ட மற்றொரு பகுதி நியாயவிலைக் கடைக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
இதனையடுத்து தங்கள் குடியிருப்புப் பகுதியிலேயே நியாயவிலைக் கடை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
அதனையேற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 இலட்சம் மதிப்பில் காலனிப் பகுதியில் நியாயவிலைக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டது.
ஆனால் இதுவரை அந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலும், பராமரிப்பின்றியும் இருப்பதால் பாழடைந்து கிடக்கிறது.
இப்போது வரை இரண்டு கி.மீ. தொலைவுக்குச் சென்றுதான் அத்தியாவசிய பொருள்களை காலனிப் பகுதி மக்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பராமரிப்பின்றிப் பூட்டியேக் கிடக்கும் அந்த நியாயவிலைக் கடை கட்டடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
“அதனை மீட்டு மாகான்யம் காலனிப் பகுதியில் நியாயவிலைக் கடையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.